மோசமடைந்த காற்றுத் தரம்; டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் இரு தினங்களுக்கு மூடல்; சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு

1 mins read
7ace1c30-e2f2-4e24-ba4c-909a76e87138
டெல்லி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டில்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய சிலநாட்களாக ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டு இருந்த காற்றுத் தரம் தற்போது ‘கடும் மோசம்’ என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது.

டில்லியின் காற்றுத் தரக் குறியீடு வியாக்கிழமை அன்று 351 புள்ளிகளாக பதிவாகி இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அது 471ஆக உயர்ந்தது. டில்லியில் பெரும்பாலான பகுதியில் காற்றின் தரக்குறியீடு 400 புள்ளிகளைக் கடந்து பதிவாகி உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்று தினமணி ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.

அடுத்த 15 முதல் 20 நாள்களுக்கு காற்று மாசு கவலைக் குரிய வகையில் இருக்கும் என டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காற்றின் தரம் மோசமானதை அடுத்து டில்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இருதினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறார்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு கூறி உள்ளது.

இந்நிலையில், டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்தியாவசியமற்ற கட்டுமான நடவடிக்கைகளுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டுக்குழு தடை விதித்துள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெஞ்சு வலி, சுவாசக்கோளாறுகள், கடுமையான இருமல்கள் காரணமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்