டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

1 mins read
476afd32-f9e4-4e6d-92e8-4a44ef73a96e
கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: குளிர்காலத்தின்போது காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைவது வழக்கம்.

அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்த நிலையில் வயல்கழிவுகள் எரிக்கப்படுவதால் அங்கிருந்து கிளம்பும் புகை டெல்லியை பாதிக்கிறது.

அதுமட்டுமல்லாது டெல்லியில் உள்ள சாலைகளைச் சுத்தம் செய்யும்போது கிளம்பும் தூசு, வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை போன்றவை நிலைமையை மோசமாக்குகின்றன.

இதனால் டெல்லியில் விழும் இலேசான பனிப்பொழிவு தூசுடன் சேர்ந்து கலைந்து போகாமல் அந்தரத்தில் தேங்குகிறது.

இதனால் 50 அடி தூரத்துக்கு அப்பால் உள்ளவற்றைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையால் பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

புகைமூட்டம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

டெல்லி மக்களை இதிலிருந்து காப்பாற்ற அம்மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கட்டுமானப் பணிகள், பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தூசு கட்டுப்படுத்தப்படுகிறது.

டீசல் மூலம் இயங்கும் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும் டெல்லிக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

இதனால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளிகளுக்கு டெல்லி அரசு இரண்டு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

சாலையில் தூசியைச் சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தின் இயந்திரத்தை அடைத்துவிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி, குருகிராம், ஃபரிடாபாத், காஸியாபாத் போன்ற இடங்களில் சில வகை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்