தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை மலையகத் தமிழர்களைப் புகழ்ந்த அமைச்சர் நிர்மலா

2 mins read
135feb05-bc8f-4311-a132-f59455b4b284
நல்லூர் கந்தசாமி கோயிலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபட்டார். - படம்: இந்திய ஊடகம்

யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபட்டார்.

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணமாக சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார்.

முன்னதாக, மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, பெரிது. இலங்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மலையகத் தமிழர்கள் அளித்திருக்கும் பங்களிப்பு மகத்தானது. இலங்கை தேநீர் உலகப் புகழ்வாய்ந்தது. இதற்குக் காரணம் மலையகத் தமிழர்களாகிய நீங்கள்தான்.

“மலையகத் தமிழர்களின் வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். மலையகத் தமிழர்களின் கடின உழைப்பை இந்திய அரசு புரிந்து வைத்திருக்கிறது. உங்களுக்காக வீடு கட்டும் திட்டத்தை இந்திய அரசு ஏற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. அதற்கான நிதி உதவியை இந்திய அரசு வழங்குகிறது.

“மலையகத் தமிழர்களின் கல்வி, சுகாதாரம் ஆகிய தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு தயாராக இருக்கிறது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அத்தகைய நடவடிக்கைகளை, உதவிகளை வழங்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். உங்களைச் சந்திப்பதற்கும் உங்கள் முன் பேசுவதற்கும் கிடைத்த வாய்ப்பு மகத்தானது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்