புதுடெல்லி: நேப்பாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் ஆட்டம் கண்டன. அதனையடுத்து மக்கள் கட்டடங்களில் இருந்த அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் நேப்பாளத்தில் திங்கட்கிழமை மாலையில் 5.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் நிலத்திற்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப் பகுதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் இருந்து 233 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது.
அதனால் ஏற்பட்ட நிலஅதிர்வு டெல்லி வட்டாரத்திற்குட்பட்ட வட இந்தியாவில் வலுவாக உணரப்பட்டது. டெல்லியில் கட்டடங்கள் ஆட்டம் கண்டதால் வீடுகள், கடைத்தொகுதிகள், அலுவலகங்களை விட்டு மக்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர்.
கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறை இவ்வாறு நிலஅதிர்வு ஏற்பட்டதால் வட இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.