பயிர்களை எரிப்பதை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
b32ceeba-2989-40f7-b219-2f37626e4a31
இந்தியாவின் வட மாநிலமான ஹரியானாவில் உள்ள கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் புகை எழுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என அது கூறியது.

காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிபதிகள், “டெல்லியில் மூச்சு திணறல் ஏற்படுத்தும் அளவுக்கு காற்றின் தரம் குறைந்துள்ளது. இது மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும். டெல்லி, பஞ்சாப், உ.பி., ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகள் உடனடியாக தங்களது மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பயிர்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று கூறினர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பஞ்சாப் அரசு மட்டும் இதற்கு பொறுப்பல்ல, டில்லி அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அண்டை மாநில விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவைதான் காற்று மாசுக்கு காரணம் என டெல்லி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்