‘பிரளயம்’ ஏவுகணை வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது

‘பிரளயம்’ ஏவுகணை வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது

1 mins read
1882dc9a-023c-4906-b5b5-f51ad919f5ab
ஒடிசாவில் உள்ள தீவிலிருந்து ஏவுகணை பாய்ச்சப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பாலசோர்: நிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா செவ்வாய்க்கிழமையன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

குறுகிய தூர ‘பிரளயம்’ ஏவுகணையை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்பிஓ) தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒடிசாவில் பாலசோர் கடற்கரை அருகில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 9.50 மணிக்கு பாய்ச்சப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் அனைத்து நோக்கங்களையும் அது பூர்த்தி செய்துள்ளதாகவும் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“பிரளயம் ஏவுகணை 350 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கக்கூடியது. அது 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான எடையை தாங்கிச் செல்லக்கூடியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிறுத்துவதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

“இந்த ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடுவானில் கடந்த பிறகு தனது பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்