பீகாரில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் மாத வருமானம் ரூ.6,000

2 mins read
63d1d921-fb54-4c6d-9a29-b1ef0dd83c70
பீகார் முதல்வர் நிதிஷ் குமார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மக்கள் ஏழ்மையில் இருப்பதும், அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 மற்றும் அதற்கும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த மாநிலத்தில் அண்மையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஏராளமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வது தெரியவந்துள்ளது.

1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோதுதான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக பீகார் மாநில அரசுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. இந்நிலையில், அந்தக் கணக்கெடுப்பு குறித்த ஆய்வின் விவரங்களை சட்டப்பேரவையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பீகாரில் 59.13 விழுக்காடு மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். 40 லட்சம் மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். 63,850 பேருக்கு வீடு இல்லை. அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளன. அவர்களின் நலனுக்காக நிதி உதவித் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் முதல்வர் நிதிஷ் குமார்.

பீகார் குடும்பங்களில் 34.13% குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.6,000 ஆகவும் 29.61% குடும்பங்களின் சராசரி மாத வருவாய் ரூ.10,000 ஆகவும் உள்ளது. 28% குடும்பங்களின் சராசரி மாத வருவாய் ரூ.10,000 முதல் ரூ.50,000 ஆக இருக்கிறது. 4% குடும்பங்களில் மட்டுமே சராசரி மாத வருவாய் ரூ.50,000க்கு அதிகமாக இருக்கிறது. இது சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்