முதல்முறையாக அயோத்தியில் கூடிய உ.பி. அமைச்சரவை

முதல்முறையாக அயோத்தியில் கூடிய உ.பி. அமைச்சரவை

படம்: இந்திய ஊடகம்

09 Nov 2023 - 5:03 pm

2 mins read

அயோத்தி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில் கூடியது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 4ஆம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக உத்தரப்பிரதேச அமைச்சரவைக் கூட்டம் அயோத்தியில் வியாழக்கிழமை கூடி உள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வியாழக்கிழமை காலை சுமார் 11.30 மணி அளவில் இந்தக் கூட்டம் தொடங்கியது.

இதற்காக, அனைத்து அமைச்சர்களும் அயோத்திக்குச் சென்றுள்ளனர். 5 மாநில தேர்தல் பணியில் இருந்த அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக அயோத்தியில் கூடுவது குறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம். தீபாவளிக் கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. நாங்கள் மிகப் பெரிய சாதனை படைக்க உள்ளோம். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான சமய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்,” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச அமைச்சர் நந்தகோபால் நந்தி கூறுகையில், “இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இதனை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். வரும் காலங்களில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்,” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவையுடன் சென்று அயோத்தியில் உள்ள அனுமர் கோயிலில் வழிபாடு செய்தார். இதனையடுத்து, அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று அங்கும் அவர்கள் வழிபட்டார்கள்.