தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை சுங்கச்சாவடியில் பல கார்கள் மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

1 mins read
78318bbc-bad1-4134-a21f-7d5c00dd4bae
மும்பையின் பாந்த்ரா-ஒர்லி கடல் பால சுங்கச்சாவடி அருகே நடந்த விபத்தில் நொறுங்கிய கார்கள். - படம்: ஊடகம்

மும்பை: மும்பையின் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தின் அருகேயுள்ள பாந்த்ரா சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வாகனங்கள் வரிசையாகக் காத்துக்கொண்டிருந்தன.

அப்போது பாந்த்ராவை நோக்கி மின்னல் வேகத்தில் ஒரு வாகனம் வந்தது. அது சுங்கச்சாவடி அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.

மோதிய வேகத்தில், அந்தக் காரின் ஓட்டுநர் அவ்விடத்தைவிட்டு காரை வேகமாக ஓட்டிச் செல்ல முயற்சி செய்தார். ஆனால், சுங்கச் சாவடியில் வரிசையாகப் பணம் கட்டுவதற்காக காத்துக்கிடந்த மேலும் 6 கார்கள் மீது மோதி, விபத்தை ஏற்படுத்தினார்.

கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 6-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சில கார்கள் நொறுங்கின.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது. அந்த ஆடவர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
மும்பைவிபத்து