தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 44 பேர் கைது

தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 44 பேர் கைது

2 mins read
c47d8ff3-c320-4a1a-b0ed-fc45df719a05
படம்: - கோப்புப் படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மியன்மாரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்ளாதேஷ் நாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது.

இவர்களை சில கும்பல்கள் ஊடுருவச் செய்வதும் இவர்களுக்கு அனைத்துலகத் தொடர்புகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவ்வாறு ஆட்கடத்தலில் ஈடுபடும் 5 கும்பல்களுக்கு எதிராக என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்முகாஷ்மீர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 55 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அந்தந்த மாநில காவல்துறையினர் இந்தச் சோதனைக்கு உதவினர்.

திரிபுராவில் 21 பேர் கைது 

இந்தச் சோதனையில் 4 கும்பல்களை சேர்ந்த 44 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கடுத்து கர்நாடகாவில் 10, அசாமில் 5, மேற்கு வங்கத்தில் 3, தமிழ்நாட்டில் 2, புதுச்சேரி, தெலுங்கானா, ஹரியானா ஆகியவற்றில் தலா 1 என 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பேசிகள், சிம் அட்டைகள், பென் டிரைவ்கள் போன்ற மின்னிலக்கச் சாதனங்கள், போலி ஆதார் மற்றும் போலி பான் அட்டைகள்,ரூ. 20 லட்சம் ரொக்கம், 4,550 அமெரிக்க டாலர் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதன்முதலாக வழக்குப் பதிவு செய்தது. அதன் விசாரணையில், இந்த வழக்கில் நாடு முழுவதும் மட்டுமின்றி அனைத்துலகத் தொடர்புகளும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ விசாரணையில் வெவ்வேறு கும்பல்கள் செயல்படுவது தெரியவந்ததால் மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அதற்கு ஆதரவான வலையமைப்பை தகர்ப்பதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ புதன்கிழமை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்