ஜிஎஸ்டி வரியல்ல; சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்” - ராகுல் காந்தி

ஜிஎஸ்டி வரியல்ல; சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்” - ராகுல் காந்தி

2 mins read
8ddc2a94-b9d3-4a2b-aee0-b5012256b6bd
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

சாட்னா: மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய அரசின் பொருள் சேவை வரி என்பது வரியல்ல, சிறு, குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்று விமர்சித்துள்ளார்.

சிறு நிறுவனங்களால் வேலைவாய்ப்பு

லட்சக்கணக்கான இதுபோன்ற நிறுவனங்களில், மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் பணியாற்றுகிறார்கள். உண்மையில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பவர்கள் அவர்கள்தான்.

பாஜக ஆட்சியில், இத்தகைய நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவர்கள் சிறு, குறு மத்தியத் தர நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி என்னும் பொருள் சேவை வரி என்பது வரியல்ல. அது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் இருந்தார். அந்த அரசு, மிகப்பெரிய தொழிலதிபரான அதானிக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறிய அளவில் கடைகளை நடத்துபவர்கள் போன்றோருக்கே ஆதரவாக செயல்பட்டது.

காங்கிரஸ் அரசை திருடிய பாஜக

இதன் காரணமாகவே, பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு கமல்நாத் அரசைக் கைப்பற்றினார்கள். உண்மையில் அவர்கள் அந்த அரசை திருடிக்கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 109 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது. அதன்பின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவிற்கு கட்சி தாவிய நிலையில், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்