திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு

1 mins read
f68ea093-3d34-4f47-8151-31da778b5036
ஸ்ரீரங்கப்பட்ணாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - படம்: தமிழ் முரசு

பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீரங்கப்பட்ணாவில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

‘மைசூரு புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி, கர்நாடகாவில் உள்ள‌ முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. அவரது ஆட்சிக் காலத்தில் இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டதாக இந்துத்தவா அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

இதனால் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் வெள்ளிக்கிழமையன்று திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சி பெங்களூரு, மைசூரு, குடகு, மங்களூரு ஆகிய இடங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. திப்பு சுல்தானின் நினைவக‌ம் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்ணாவில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் ஊர்வலமாகச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் மண்டியா தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் அத்துமீறி ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இந்துத்துவா அமைப்பினரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, ஸ்ரீரங்கப்பட்ணாவில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்