தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஞ்சாப்பில் நெல் உற்பத்தியை குறைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
8c6033cb-2f16-4b3a-a5b3-a6eb99251d86
பஞ்சாப்பில் நெல் பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், அங்கு நீர்மட்டம் குறைந்து வருவதாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு மோசமடைவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

‘‘ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க எண்கள் கொண்ட தனியார் வாகனங்களை மாறி, மாறி இயக்கும் திட்டம் குறைந்த பலனை அளித்தாலும் அந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை முதல் டெல்லி அரசு அமல்படுத்த வேண்டும். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளை மட்டுமே சாலைகளில் அனுமதிப்பது தொடர்பாக டெல்லி அரசு பரிசீலிக்கவேண்டும்,’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி அரசு, ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்களை மாறி, மாறி இயக்கும் திட்டம் சிறந்த பலன் அளிக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்த பிறகே அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி அரசைக் கடுமையாக விமர்சித்தனர். ‘‘சுமையை நீதிமன்றத்தின் மீதுசுமத்த ஆம் ஆத்மி அரசு முயற்சி செய்கிறது. இந்த முயற்சியில் ஈடுபடாமல், டெல்லி அரசு ஒழுங்காகச் செயல்படும் பணியில் ஈடுபட வேண்டும்,’’ என அவர்கள் கூறினர்.

அதன்பின் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் படி வாகனங்களை இயக்குவதால் மாசு 13 விழுக்காடு குறைந்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்தது.

“வாகனங்களால் ஏற்படும் மாசின் மொத்த அளவு 17 விழுக்காடு. அதில் 13 விழுக்காடு குறைவதாக நீங்கள் கூறுகிறீர்கள். இத்திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துவிட்டோம். இனி இதுகுறித்து டெல்லி அரசு முடிவு செய்துகொள்ளலாம். உச்ச நீதி மன்ற உத்தரவால்தான் காற்று மாசு ஏற்படுகிறது என இனி நீங்கள் கூற முடியாது.

“மேலும் பஞ்சாப் மாநிலத்தில் நெல் பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், அங்கு நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பஞ்சாப்பில் இன்னொரு பாலைவனம் நமக்கு வேண்டாம். அறுவடைக்குப்பின் வைக்கோல்களை எரிப்பதால் காற்று மாசும் அதிகரிக்கிறது. அங்கு வைக்கோல் எரிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டு காற்றின் தரம் மேம்பட நாங்கள் விரும்புகிறோம். இதற்கான நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி. பஞ்சாப்பில் நெல் உற்பத்தியை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை தேவை.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில் , ‘‘ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீபாவளிக்குப் பின் காற்று மாசுவின் தரத்தைப் பொறுத்து பரிசீலிக்கப்படும். காற்றின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதால், இத்திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்