இமாலய நெடுஞ்சாலை சுரங்க இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்

இமாலய நெடுஞ்சாலை சுரங்க இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்

2 mins read
6eb2baa2-6b35-4a11-a8f2-ef64a9826063
இடிபாடுகளில் சிக்கிய ஊழியர்கள் அனைவரையும் 48 மணி நேரத்திற்குள் மீட்டுவிடலாம் என்று பேரிடர் நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். - படம்: இபிஏ

லக்னோ: உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டப்படும் இமாலய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இரண்டு நாள்களுக்குமுன் இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 40 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ. 14) கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகலமான எஃகுக் குழாயைப் பொருத்துவதற்காக மண்ணை அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தக் குழாய் வழியாக ஊழியர்களை மீட்பது திட்டம்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் அந்த சுரங்கப்பாதைக் கட்டுமானம் இடிந்து விழுந்தது.

இந்துக்களின் புனித யாத்திரைப் பாதையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓர் அங்கமாக அந்த சுரங்கப்பாதை கட்டப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஊழியர்களுக்கு உணவு, குடிநீர், உயிர்வாயு ஆகியவற்றை விநியோகிப்பதாகவும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பேரிடர் நிர்வாகப் பிரிவு அதிகாரி தேவேந்திர சிங் பட்வால் தெரிவித்தார்.

கடந்த இரு நாள்களாக மண்ணைத் தோண்டும் இயந்திரங்களின் உதவியுடன், சிக்கியுள்ள ஊழியர்களை நெருங்கும் வகையில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதில் அகலமான எஃகுக் குழாயைப் பொருத்தி அந்த ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரவு, பகலாக 200க்கு மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டது.

சிக்கியுள்ள ஊழியர்களை மீட்பதற்கான கால வரையறையை உறுதியாகச் சொல்வது கடினம் என்றார் திரு பட்வால்.

சம்பவ இடத்தில், மாநில அரசாங்கத்தையும் கல்விக் கழகங்களையும் சேர்ந்த நிலப் பண்பியல் வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இமயமலைப் பகுதியில் நிலச் சரிவு, நிலநடுக்கம், வெள்ளம் போன்றவை அடிக்கடி ஏற்படுவதுண்டு. அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் குறைகூறி வந்துள்ளனர்.

‘சார் தாம்’ எனப்படும் நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் கட்டப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலை, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மிக முக்கியமாகக் கருதும் கனவுத் திட்டமாகும்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ($2.04 பில்லியன்), 889 கி.மீ. தொலைவுக்கு ‘சார் தாம்’ நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது

2018ஆம் ஆண்டு தொடங்கிய இதற்கான கட்டுமானப் பணி, மே 2024ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்