ஆலுவா: கேரள மாநிலத்தின் ஆலுவா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது ஐந்து வயதுச் பெண் ஜூலை மாதம் 27ஆம் தேதி காணாமல் போனதைத் தொடர்ந்து காவல் துறையில் அந்த பீகார் ஊழியர் புகாரளித்திருந்தார்.
விசாரணை நடத்திய காவல் துறையினர் மறுநாள் ஆலுவாவில் உள்ள சதுப்பு நிலப் பகுதி ஒன்றில் சிறுமி சாக்குப் பையில் இறந்து கிடந்ததைக் கண்டனர்.
உடற் கூராய்வில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
அந்தப் பகுதியில் இருந்த உள்கட்டமைப்பு புகைப்படக் கருவிகள் மூலம் பீகாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம், வயது 29, என்பவர் இந்தக் கொடூரச் செயலைப் புரிந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அசாஃபக் அலாமும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி தண்டனையை அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் அசாஃபக் அலாமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் அசாஃபக் அலாமுக்கு, குழந்தைகள் தினமான நவம்பர் 14 செவ்வாய்க்கிழமை அன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.