ஜார்க்கண்டில் ரூ.24,000 கோடியில் பழங்குடியினர் நலத்திட்டங்கள்

ஜார்க்கண்டில் ரூ.24,000 கோடியில் பழங்குடியினர் நலத்திட்டங்கள்

2 mins read
5bf75a35-1f56-4fe4-a544-1fe7d08d8a8d
ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துத் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

ராஞ்சி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (நவ. 14) ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் மோடி, புதன்கிழமை காலை 9:30 மணிக்கு ராஞ்சியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் லார்ட் பிர்சா முண்டா நினைவுப் பூங்காவையும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தையும் பார்வையிடுவார்.

அதன்பிறகு பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த இடமான உலிஹட்டு கிராமத்துக்கு அவர் செல்வார் எனக் கூறப்படுகிறது.

காலை 11:30 மணியளவில் குந்தியில், மூன்றாவது பழங்குடியினப் பெருமை தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஏறத்தாழ 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான சிறப்பு நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.

அதைத் தொடர்ந்து, கிசான் திட்டத்தின்கீழ், 15வது தவணையாக சுமார் 18 கோடி ரூபாயைப் பிரதமர் வழங்குவார் என்று கூறப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமது பயணத்தின்போது, ஜார்க்கண்டில் ரூ. 7,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவிருக்கிறார்.

பழங்குடியினரின் பெருமை தினமான நவம்பர் 15ஆம் தேதி, அரசின் முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை’ பிரசார வேனின் பயணத்தைத் திரு மோடி தொடங்கி வைப்பார்.

பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த வேன் பயணம், 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்