புதுடெல்லி காற்றுத் தூய்மைக்கேட்டால் மருத்துவர் அறிவுரையின்படி ஜெய்ப்பூர் செல்லும் சோனியா காந்தி

புதுடெல்லி காற்றுத் தூய்மைக்கேட்டால் மருத்துவர் அறிவுரையின்படி ஜெய்ப்பூர் செல்லும் சோனியா காந்தி

1 mins read
5799e186-2fcb-422d-83e0-5cbf4abc4ddf
கோப்புப் படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்காலிகமாக ஜெய்ப்பூர் நகருக்குக் குடியேறவிருக்கிறார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேறி இரண்டு மாதங்களே ஆன நிலையில், மருத்துவரின் அறிவுரையின் பேரில், புதுடெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை அவர் ஜெய்ப்பூரில் தங்குவார் என்று கூறப்பட்டது.

திருமதி காந்தி சுவாசக் கோளாறுகளால் அவதியுறுவதால், காற்றின் தரம் நன்றாக உள்ள இடத்திற்குச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (நவ. 14) புதுடெல்லியின் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 375ஆகப் பதிவானது. அது ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில், ஜெய்ப்பூர் நகரில் அக்குறியீடு 72ஆகப் பதிவாகியுள்ளது. அது ‘மிதமான நிலை’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தனியார் இணையத்தளமான ‘ஏகியூஐ.ஐஎன்’ இத்தகவல்களை வெளியிட்டது.

திருமதி சோனியா காந்தி 2020ஆம் ஆண்டிலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி, காற்று மாசு அதிகமிருந்த புதுடெல்லியிலிருந்து வெளியேறி கோவாவில் தங்கியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்