ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது; 36 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது; 36 பேர் மரணம்

1 mins read
d9c19da3-751a-4f76-8e47-19277adac362
பேருந்தில் பயணம் செய்த 55 பேரில் 36 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை இவ்விபத்து நிகழ்ந்தது.

கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

அப்போது அந்தப் பேருந்தில் 55 பயணிகள் இருந்தனர். அவர்களில் 36 போ் படுகாயமடைந்து உயிரிழந்தனா். 19 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து