பழங்குடியினருக்கான ரூ.24,000 கோடி திட்டம் தொடங்கியது

பழங்குடியினருக்கான ரூ.24,000 கோடி திட்டம் தொடங்கியது

1 mins read
af0d5e4c-539e-42de-a98d-fc11c121fb51
படம்: - இந்திய ஊடகம்

ஜார்க்கண்ட்: பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான ‘பழங்குடியினா் வளர்ச்சித் திட்டத்தை’ ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பழங்குடி சமூகப் போராளி பிா்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பா் 15ஆம் தேதி அவா் பிறந்த ஊரான உலியாட்டுவில் அவரது சிலைக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வா் ஹேமந்த் சுரேன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பழங்குடியினா் வளா்ச்சித் திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்தார். 

இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு பழங்குடியினா் வளா்ச்சித் திட்டம் உதவும். பழங்குடியினா் வளா்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு ஆறு மடங்கு உயா்த்தி உள்ளது என்று விழாவில்  மோடி குறிப்பிட்டார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் அடர் வனப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தினர் பயனடைவார்கள். 

இதற்காக 18 மாநிலங்களில் 220 மாவட்டங்களில் 22,544 கிராமங்களில் வசித்து வரும் 75 மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்களை அரசு கண்டறிந்துள்ளது.

பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு தொடர் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார் என்பதையும் பிரதமா் மோடி நினைவூட்டினார்.

குறிப்புச் சொற்கள்