மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு

2 mins read
274b1f37-e95a-4a4b-a1b7-612deed88abf
மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள். - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலமான மிசோரம் ஆகியவற்றின் சட்டசபை பதவிக் காலம் முடிகிறது.

இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 7ஆம் தேதி மிசோரமில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நக்சல் பிரச்சினை காரணமாக சத்தீஸ்கரில் உள்ள இருபது தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இம்மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய எழுபது தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடந்தது.

இங்கு 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. பின்னர் 2018ல் ஆட்சியைப் பிடித்த காங்கிரசுக்கும் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜகவுக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு நடக்கும் எழுபது தொகுதிகளில் 958 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இங்கு, ஆளும் பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் போட்டியில் குதித்துள்ளன.

இந்த மாநிலத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.

தேர்தல் காரணமாக இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வாக்குப் பதிவுக்கு பிறகு அடுத்த மாதம் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்