தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோத்திக்கு இலவச பயணம்; உத்தவ் தாக்கரே ஆட்சேபம்

2 mins read
ad4a0ac0-41de-4c68-a7df-51fa36733d40
ஆளுக்கு ஒரு நியாயம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: அயோத்திக்கு இலவசப் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்ததற்கு உத்தவ் தாக்கரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 13ஆம் தேதி விதிஷா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் இங்குள்ள மக்கள் படிப்படியாக அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படும்,” என்றார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதுபோன்ற வாக்குறுதியை அளித்துள்ளார்.

இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில், பாஜகவுக்கு ஆதரவாக இரட்டை நிலைப்பாட்டை ஆணையம் கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “கடந்த 1987ல் மகாராஷ்டிராவின் விலே பார்லே பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இந்துத்துவா அடிப்படையில் பிரச்சாரம் செய்ததால் சிவசேனா தலைவர் பால் தாக்ரேயின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் அப்போது ரத்து செய்தது. ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக கருதுகிறோம். பந்தை நன்கு அடித்து விளையாட பாஜகவை அனுமதித்து விட்டு எங்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுப்பது தேர்தலை நியாயமாக சுதந்திரமாக நடத்துவது ஆகாது” என்றார்.

குறிப்புச் சொற்கள்