புதுடெல்லி: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள 1.5 லட்சம் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
உலக கழிவறை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
‘பாதுகாப்பான சுகாதார மாற்றத்தை முடுக்கி விடுதல்’ என்பது உலக கழிவறை தினத்துக்கான இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. இதையொட்டி, ‘சுத்தமான கழிவறை சவால்’ என்ற இயக்கத்தை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் நகர்ப்புற பொது இடங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் பணி அடுத்த 5 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள பொது மற்றும் சமுதாய கழிவறைகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதே இந்தச் சவாலின் முக்கிய நோக்கம் ஆகும்.
தூய்மை, அணுகல், வடிவமைப்பில் புதுமை மற்றும் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் மாதிரி பொதுக் கழிவறைகளையும் இந்தச் சவால் அங்கீகரிக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்கூட தங்கள் சிறந்த மாதிரி பொதுக் கழிவறைகளைப் பரிந்துரைக்கலாம் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

