ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று பணம்படைத்த மடங்களின் துறவிகள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
அங்கு பாஜக சார்பில் ஒரு முஸ்லிம்கூட தேர்வுசெய்யப்படவில்லை. அதனால் பாஜக இந்துத்துவா அரசியல் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாஜக தமது கொள்கையை, ராஜஸ்தானிலும் கடைப்பிடிப்பிடிப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
துறவிகளைத் தேர்தலில் நிறுத்துவதால் அந்த மடங்களின் துறவிகளுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆதரவு கிடைக்கும் என்று பாஜக நம்புவதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் திஜாரா மடத்தின் பாலக்நாத் என்பவர் அழ்வர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஹவா மெஹல் மடத்தின் ஆச்சார்யா பால்முகுந்த், ஜெய்ப்பூரில் போட்டியிடுகிறார். போக்ரான் மடத்தின் பிரதாப்புரி போக்ரான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த மூன்று துறவிகளுமே அதிக சொத்துகள் கொண்ட செல்வ செழிப்பான மடங்களின் துறவிகள். இவர்களுக்கு அன்றாடம் பக்தர்கள் மூலம் காணிக்கையாக நிதி குவிகின்றது. இந்த மூன்று துறவிகளில் பாலக்நாத்தை எதிர்த்து திஜாரா தொகுதியில் காங்கிரஸ் முஸ்லிமான இம்ரான்கானுக்கு வாய்ப்பளித்துள்ளது. இவர் உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜில் இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.
ஜெய்சல்மேர் மாவட்டத்தின் போக்ரானில் போட்டியிடும் பாலக்நாத்தை எதிர்த்து காங்கிரஸின் மாநில அமைச்சரான சாலே முகம்மது போட்டியிடுகிறார். 2018 தேர்தலிலும் பாஜகவில் போட்டியிட்ட துறவி பாலக்நாத்தை எதிர்த்த இந்த முகம்மது வெற்றி பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் போட்டியிடும் துறவி பால்முகுந்த் தனது பரபரப்பான பேச்சுக்களுக்கு பெயர் போனவர்.
ராஜஸ்தானின் பாஜகவில் ஒரே ஒரு முஸ்லிம் தலைவராக யூனுஸ்கான் இருந்தார். இந்த ஒரு முஸ்லிம் பிரமுகருக்கும் இந்த முறை பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால், யூனுஸ்கான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதன்மூலம், முஸ்லிம்களுக்கும் பாஜகவில் இனி போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற கருத்து தவறானதாகிவிட்டது.
காங்கிரசில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு ராஜஸ்தானில் சுமார் 10 விழுக்காடு முஸ்லிம்கள் இருப்பதுதான் காரணம். இதுபோல், துறவிகளின் போட்டி பாரதிய ஜனதா கட்சியில் துவக்கம் முதல் இருந்து வருகிறது.

