மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப் பதிவு

மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப் பதிவு

2 mins read
3919edc4-910f-46c9-b7f9-ff2b924f57da
மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இந்த முறை அம்மாநிலத்தின் வாக்குப்பதிவு விழுக்காடு கணிசமாக அதிகரித்துள்ளது. அங்குள்ள இந்தூரில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் குடிமக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

போபால்: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அம்மாநிலம் இதுவரை கண்டிராத வகையில் 76.22 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1956ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் உருவானது முதல் பதிவான அதிகபட்ச வாக்குப் பதிவு இது என்று கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 75.63 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 0.59 விழுக்காடு வாக்குகள் அதிகரித்துள்ளது

230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 5.60 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

அதிகபட்சமாக சியோனி மாவட்டத்தில் 85.68 விழுக்காடும், குறைந்தபட்சமாக பழங்குடியினா் அதிகம் வாழும் அலிராஜ்பூா் மாவட்டத்தில் 60.10 விழுக்காடும் வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கா் மற்றும் மகாராஷ்டிரத்தையொட்டி அமைந்துள்ள நக்ஸல் பாதிப்பு மிகுந்த பாலாகாட் மாவட்டத்தில் 85.23 சதவீத வாக்குகள் பதிவாகின.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து மூன்று முறை பாஜக வெற்றிவாகை சூடியது. ஆனால், கடந்த 2018 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 114 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 109 தொகுதிகளே கிடைத்தன.

இதையடுத்து, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியதால், கடந்த 2020-இல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, மீண்டும் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது.

பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பலப்பரீட்சையாக கருதப்படும் இந்தத் தோ்தலில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் முதல்வா் கமல்நாத் உள்பட மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களமிறங்கினா். வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்