‘ஹலால்’ சான்று பெற்ற பொருள்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் தடை

2 mins read
5ffcba81-cf08-40eb-9e5e-0f8b0d2fec0f
படம்: - இந்திய ஊடகம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹலால் தரச்சான்று பெற்ற பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமயச் சட்ட விதிகளின்படி, ‘ஹலால்’ என்றால் அனுமதிக்கப்பட்டவை என்றும் ‘ஹராம்’ என்றால் தடை செய்யப்பட்டவை என்றும் பொருள்.

இந்தியாவில் ‘ஹலால்’ தரச்சான்று சட்டப்பூர்வமாக நடைமுறையில் இல்லை. எனினும், சில தனியார் நிறுவனங்கள் உணவு, மருந்து, அழகூட்டுப் பொருள்களுக்கு ‘ஹலால்’ தரச் சான்றுகளை அளித்து வருகின்றன.

இது தொடர்பாக உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவை சேர்ந்த சைலேந்திர குமார் சர்மா என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், “ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட் - சென்னை, ஜமாத் உலமா ஹிண்ட் அறக்கட்டளை - டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இண்டியா- மும்பை, ஜமாத் உலமா - மும்பை ஆகிய அமைப்புகள் பல்வேறு பொருள்களுக்கு சட்டவிரோதமாக ‘ஹலால்’ தரச்சான்றுகளை அளித்து வருகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும்,” என்று அவர் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக லக்னோ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு சனிக்கிழமை (நவம்பர் 18) பிறப்பித்த உத்தரவில், “உத்தர பிரதேசத்தில் ‘ஹலால்’ தரச் சான்று பெற்ற பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் இந்தத் தடை வரம்புக்குள் வராது,” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐ மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ தரச்சான்று நடைமுறைகளே சட்டப்பூர்வமானவை. ‘ஹலால்’ தரச் சான்று நடைமுறை சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்