திறன் மேம்பாட்டு நிதி மோசடி: சந்திரபாபு நாயுடுவுக்கு பிணை

திறன் மேம்பாட்டு நிதி மோசடி: சந்திரபாபு நாயுடுவுக்கு பிணை

2 mins read
f7511180-6a86-49f6-8a96-da9d83aa2343
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு - படம்: தி இந்து கோப்புப் படம்
Google News Preferred Icon

விஜயவாடா: தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி மோசடி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் ஆந்திர குற்றப் பிரிவு காவல்துறையினர் செப்டம்பர் 9ஆம் தேதி திரு நாயுடுவை கைது செய்தனர்.

பிறகு மருத்துவ காரணங்களைக் காட்டி சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் அக்டோபர் 31ஆம் தேதி இடைக்கால பிணையில் அவரை விடுவித்தது.

இதனால் 53 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் சந்திரபாபு நாயுடு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது பிணை தொடர்பான மனு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு நீதிபதி மல்லிகார்ஜுன ராவ் முன் வந்தது. இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதி, ஒரு துறையில் தவறு நடந்தால், அதற்கு முதல்வர் நேரடியாக பொறுப்பாக மாட்டார் என்று கூறினார். அவருக்கு நேரடியாக பொறுப்பு உண்டு எனக் கூறினால், அதற்கு தகுந்த ஆதாரங்களை காவல்துறையினர் இதுவரை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறுவதையும் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை என்று நீதிபதி விளக்கினார். அதற்குக் காரணம் இத்தனை காலம் அவர் வெளியில் இருந்துள்ளார். இதில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனால் அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளதால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்று கூறவும் முடியாது என்றார்.

பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழக்கமான பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி மல்லிகார்ஜுன ராவ்.

குறிப்புச் சொற்கள்