திடீர் மரணத்துக்கும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் தொடர்பில்லை: ஆய்வாளர்கள்

1 mins read
7d8e7cb3-69ef-4298-8afe-d24df7748661
2022 பிப்ரவரி 2ஆம் தேதி அன்று சுகாதாரத் துறை ஊழியரான அஸ்மிதா கொலடியா, 29, கையில் தமது எட்டு மாதக் குழந்தையை தூக்கிக் கொண்டு கிராமத்தில் ஒருவருக்கு தடுப்பூசி போடுவதை இந்தப் படம் காட்டுகிறது - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: எதிர்பாராத திடீர் மரணங்களின் பின்னணியில் கொவிட்-19 தடுப்பூசி இருப்பதற்கான ஆதாரம் இல்லையென்று இந்திய மருத்துவ அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

ஆனால் அதிகப்படியான குடிப்பழக்கமும் தீவிர உடற்பயிற்சிகளும் மரணத்துக்கான ஆபத்தான காரணிகள் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் (ஐசிஎம்ஆர்), 2021 அக்டோபருக்கும் 2023 மார்ச்சுக்கும் இடையே 18 முதல் 45 வரையிலான ஆரோக்கியமான பெரியவர்கள் சிலர் விளக்கமுடியாத திடீர் மரணமடைந்தது குறித்து ஆய்வு நடத்தியது.

“ஆய்வில் கொவிட்-19 தடுப்பூசிக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.

ஆய்வின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

“அதே சமயத்தில் குடும்பப் பின்னணி, கொவிட்-19க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, அதிகப்படியான குடிப்பழக்கம், தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை திடீர் மரணத்துக்கான காரணங்களாக இருந்துள்ளன,” என்று ஆய்வாளர்கள் கூறினர்.

ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் 29,171 திடீர் மரணங்களை அடையாளம் கண்டுபிடித்து 729 சம்பவங்களை ஆராய்ந்துள்ளனர்.

இந்தியாவில் 45 மில்லியன் பேர் கொவிட்-19 தொற்றால் அவதியுற்றதாகவும் 533,295 பேர் அதன் தொடர்பில் மரணமடைந்ததாகவும் அந்நாட்டு அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கொவிட்-19 உச்சக்கட்டத்தின்போது இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடமில்லை. சிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்