சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களிலிருந்து 2,700 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செய்யாறு மேல்மா கூட்டு சாலையில் செவ்வாய்க்கிழமை (22.11.2023) காலை 10.00 மணிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 2,700- ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான முப்போகம் விளையும் விளைநிலங்கள் ஆகும்.
“செய்யாற்றை ஒட்டிய வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிலத்தை இழக்க விரும்பாத உழவர்களும், பொதுமக்களும் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 125 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
“அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் குறையைத் தீர்ப்பதற்குப் பதில், கடந்த 4ஆம் தேதி அதிகாலையில் காவல்துறை மூலம் வீடுவீடாகச் சென்று 27 விவசாயிகளை கைது செய்தது. அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு வெடித்த நிலையில், 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற்றது. ஆனால், நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிடாமல் தீவிரப்படுத்தி வருகிறது.
“மிகவும் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில், சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படுவது வரவேற்கப்படுகிறது. அத்தகைய தொழிற்பூங்காக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி, செங்கம், போளூர் போன்ற பகுதிகளில் அரசுக்குச் சொந்தமாக உள்ள தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டால் அனைவருக்கும் பயன்தரும்.
விளைநிலங்களை அழித்து தொழிற்கூடங்கள் அமைப்பதை ஏற்கமுடியாது. உழவுத் தொழில் அழிந்தால், தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற மாநிலங்களிடமும் வெளிநாடுகளிடமும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


