தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு

2 mins read
81a5c620-d6a9-4786-95c8-be47c58a4abe
மணிப்பூர் வான்வெளியில் பறந்த பறக்கும் தட்டால் பரபரப்பு ஏற்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் இருக்கும் விமான நிலையத்துக்கு அருகே அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பறக்கும் தட்டைத் தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

வழக்கமாக வானத்தில் பறக்கும் தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருள்கள் அவ்வப்போது தெரிவதாகத் தகவல் வெளியாவதால் பரபரப்பு ஏற்படுவதுண்டு.

இந்நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் இம்பாலில் நிகழ்ந்தது. அங்குள்ள விமான நிலையம் அருகே பறக்கும் தட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிற்பகல் 2.30 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.

அங்குள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு மேலே பறக்கும் தட்டு காணப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

கட்டடத்தின் மாடியில் இருந்து பார்த்தபோது அந்த வெள்ளை நிற பறக்கும் தட்டு தெரிந்ததாகவும் விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உட்பட பலர் இதைப் பார்த்ததாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவத்தால் இம்பால் விமான நிலையத்தில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலைய வான்வெளி மூன்று மணி நேரம் மூடப்பட்டது.

இதையடுத்து அந்தப் பறக்கும் தட்டைத் தேடும் பணியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த இரு ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபட்டன.

ஆனால், அந்தப் பறக்கும் தட்டு விமான நிலையப் பகுதியில் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து, இம்பால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் அனுமதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்