ராஜஸ்தான்: இருநூறு தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இணைந்து செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்; 1.05 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயுக் கலன் வழங்கப்படும்; ரூ.400க்கு எரிவாயுக் கலன் விற்கப்படும்; சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்; 4 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்; 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்; சிரஞ்சீவி காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்; அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு கார்கே,‛‛ராஜஸ்தான் எப்போதும் காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது. நாங்கள் எப்போதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே அளிக்கிறோம்,’‘ என்றார்.
திரு கெலாட் கூறுகையில், “ராஜஸ்தானில் தனிநபர் வருமானம் 46.48 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளை ஓப்பிடும்போது இதுவே ஆக அதிகம். தனிநபர் வருவாயில் முதலிடம் தொடுவதே எங்கள் கனவு,’‘ எனக் கூறினார்.
இந்நிலையில், கடைசிகட்ட தேர்தல் பரப்புரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இறங்குவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திரு கெலாட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்துவரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பாஜக களத்தில் நிற்கிறது.
ஜெய்ப்பூரில் புதன்கிழமை பிரம்மாண்ட சாலைக்காட்சிக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை நிறைவடைகிறது.