தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானாவில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டிய நில உரிமையாளர்கள் 29 பேர் கைது

2 mins read
4e112698-f928-4bfe-bb88-e59fac3e0bc7
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஹரியானாவின் குருகிராமில் நில உரிமையாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதான இந்த 29 பேர், ஹரியானாவின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியவர்கள். இவர்களை போன்று, விதிமுறைகளை மீறி சொகுசு பங்களாக்களைக் கட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல் துறை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதற்காக, ஹரியானா மாநில பாஜக அரசு, அமலாக்கப் பிரிவை கடந்த ஜூலையில் அமைத்தது. அதன் சார்பில் குருகிராமில் 96 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் ஹரியானாவின் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. இந்த நகரம் உருவாவதற்கு முன் இங்கு பயிர் செய்த விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று கோடீஸ்வரர்களாகி விட்டனர்.

இதற்கு அங்கு பல தகவல்தொழில்நுட்ப (ஐடி) பெருநிறுவனங்கள் அமைந்ததுதான் காரணம். பல நில உரிமையாளர்கள், ஹரியானா அரசின் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டி விட்டனர். இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஹரியானா மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஹரியானா அரசின் நில அமலாக்கப் பிரிவின் ஆய்வாளரான அர்விந்த் தஹியா பேசினார்.

‘‘கைதான 29 பேரில் 8 பேர் நில குண்டர்கும்பல் தலைவர்கள். அவர்களின் தூண்டுதலினால் மற்றவர்களும் கட்டட விதிகளை மீறிவருகின்றனர். அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி கைது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பெற்றுத் தரப்படும்,’’ என்றார் திரு அர்விந்த்.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இதுபோல் விதிகளை மீறும் கட்டட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற பொதுவானக் கருத்து உண்டு. இதை மாற்றும் வகையில் ஹரியானா அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்