தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள்: மேல்முறையீடு ஏற்பு

1 mins read
1cae2edb-6c35-4897-ac68-b924a7a4352f
படம்: - இந்திய ஊடகம்

கத்தார்: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை டோஹா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கத்தார் உளவுப் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அவர்கள் அனைவருக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள், இந்தியத் தூதரகத்தை அணுக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 8 பேரையும் பத்திரமாக மீட்க இந்தியத் தூதரகம் நடவடிக்கைகளைத் தொடங்கியது. 8 பேரும் கடற்படையில் பொறுப்புள்ள அதிகாரிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்நிலையில், 8 பேரில் ஒருவரின் சகோதரியான மீட்டு பார்கவா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தனது சகோதரரை பத்திரமாக மீட்க அரசு தனது நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும் தாமதமின்றி அவர்கள் அனைவரும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.