கடன் மோசடி: கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரை விசாரிக்க 2 நாள் அனுமதி

கடன் மோசடி: கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரை விசாரிக்க 2 நாள் அனுமதி

2 mins read
18588da6-3be3-44b7-937a-1c6f192c4241
கேரளாவின் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் கடன் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் என்.பாசுரங்கன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கொச்சி: திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநிலக் கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.

இதுகுறித்து மாநிலக் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் செயலர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

விசாரணையில், கூட்டுறவு வங்கியில் தலைவராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர் என்.பாசுரங்கனுக்கு இந்த மோசடியில் முக்கியப் பங்கு வகித்தாக தெரியவந்தது.

ரூ.4.20 கோடி கடன் மோசடி: அவர் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் தனது நிலத்தை அடகு வைத்து ரூ.3.20 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதும் அவரது மகன் அகில்ஜித் ரூ.1 கோடிக்கு மேல் 8 முறை கடன் வாங்கியுள்ளதும், அவர்கள் இருவரும் கடனைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததும் தெரியவந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் இருவரையும் மூன்றாவது முறையாக கொச்சிக்கு அழைத்துச் சென்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதையடுத்து இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

பாசுரங்கன், அகில்ஜித் ஆகிய இருவரும் புதன்கிழமை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இருவரிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இருவரையும் ஆதாரங்களுடன் விசாரிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து இருவரையும் மேலும் 2 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குறிப்புச் சொற்கள்