புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டது: ஊழியர் வேறு நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோருகின்றனர்

2 mins read
0a061974-0c49-4187-8ee0-6a1c168f8813
புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லியில் இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசு புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்திற்கான அதிகாரிகளை நியமித்து இருந்தது. இந்நிலையில் அந்த அரசு அகற்றப்பட்டு ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது.

தாலிபான் அரசாங்கத்தை இந்தியா இப்போதுவரை அங்கீ கரிக்கவில்லை. எனினும் கடந்த 2021 முதல் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் ஊழியர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கேற்ப அவ்வப்போது தூதரக ஊழியர்களுக்கான விசா, நீட்டிக்கப்பட்டு வந்தது. எனினும், தற்போது விசா நீட்டிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்திலேயே டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த தூதரும் மூத்த ஊழியர்களும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்று விட்டனர்.

அந்நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோரப்போவதாகவும் டெல்லி தூதரக அலுவலகத்தில் மேற்கொள்ளபட்ட பணிகள் கைவிடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாலிபான் அரசாங்கம் மட்டும் அல்லாமல் இந்திய அரசு தரப்பில் இருந்தும் தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதன் எதிரொலியாகவே தூதரக ஊழியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும், ‘எக்ஸ்’ என்று அறியப்படும் ஒரு டுவிட்டர் உறுப்பினர் அதில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தூதரக ஊழியர்கள் மொத்தம் மூன்று நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், ஒருவர் கூட இந்தியாவில் தற்போது இல்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மும்பை உள்ளிட்ட சில இடங்களிலும் ஆப்கான் தூதரகங்கள் இயங்கி வந்த நிலையில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து அதிகாரபூர்வ விவரங்கள் ஏதுமில்லை.

இந்த விவகாரம் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சுகள் அதிகாரபூர்வ தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்