கோல்கத்தா: கொரோனா தொற்றுக் காலத்தில் மேற்கு வங்கத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வருமானவரித்துறை, மத்திய சுகாதார அமைச்சு, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு புகார் அளித்திருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
மிக விரைவில் அமலாக்கத்துறை இந்த ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது என்று சுவேந்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 நவம்பர் மாதம் வரை மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக சுவேந்து அதிகாரி பணியாற்றினார்.
2020 டிசம்பர் மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, அதே மாதமே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

