கேரள இசை நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

2 mins read
0f083bb3-f5ca-4ac7-ada0-8ed217312cb5
களமசேரியில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில் ஆண்டு விழா இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - படம்: ஹெச்டி
multi-img1 of 2

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் துயரமான சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

எர்ணாகுளம் மாவட்டத்தின் களமசேரியில் உள்ள கொச்சி பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழாவை ஒட்டி இசை நிகழ்ச்சி நடந்தது. பிரபல பாலிவுட் பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற அந்த நிகழ்ச்சி கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான மாணவ, மாணவியர் திரண்டிருந்தனர். கல்லூரியின் திறந்தவெளி நிரம்பியதால், ஏராளமானோர் வெளியில் நின்று நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

அப்போது, மழை பெய்யத் தொடங்கியதால், மழையில் நனையாமல் உள்ளே சென்று நிகழ்ச்சியைக் காண்பதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு மாணவர்களும், 2 மாணவியரும் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் 64க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களையும் கல்லூரி மாணவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசை நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு போதுமான காவலர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளூர்க் காவலர்கள் அனைவரும் இந்தியன் சூப்பர் லீக் ஆட்டம் நடக்கும் ஜவகர்லால் நேரு அரங்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்