பெண் செய்தியாளர் சௌம்யா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண் செய்தியாளர் சௌம்யா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
7051abad-7ced-4924-bfe9-f5d96e3aa631
2008ஆம் டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர் செளமியா கொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தீர்ப்பின் விவரம் அறிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த சௌம்யா விஸ்வநாதன், டெல்லியில் ஓர் ஆங்கில தொலைக்காட்சி நிலையத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார்.

அவர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அதிகாலை வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். தெற்கு டெல்லியின் நெல்சன் மண்டேலா சாலையில் அவரது கார் சென்றபோது வழிப்பறி செய்வதற்காக சிலர் துரத்திக் கொண்டு வந்தனர். சௌம்யா காரை வேகமாக ஓட்டிச் செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியால் அவரை நோக்கிச் சுட்டனர். அதில் சௌம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார், அஜய் சேத்தி ஆகிய ஐந்து பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 5 பேரும் குற்றவாளிகள் என இந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்தக் கொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை (25.11.2023) தீர்ப்பின் விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது. அதில் குற்றவாளிகள் அஜய் சேத்தியைத் தவிர்த்து மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டுச் சிறைத் தண்டனையும் ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மொத்த அபராதத் தொகையையும் சௌம்யாவின் பெற்றோருக்கு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது அரிதிலும் அரிதான வழக்கு என்ற பிரிவின் கீழ் வராது என்பதால், குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிப்பது சாத்தியமாகாது என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்