மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி உத்தரவு

மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி உத்தரவு

படம்: பிடிஐ

27 Nov 2023 - 6:02 pm

2 mins read

கொச்சி: கேரள முதல்வர் பினராயி விஜயன், இசை நிகழ்ச்சி நெருக்கடியில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவம்பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் களமசேரியில் அமைந்துள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில், நவம்பர் 25ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடந்தது.

அரங்கத்திற்கு வெளியே நின்று ஏராளமான மாணவர்கள் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால் மாணவர்கள் அரங்கத்தினுள் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிகழ்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாசலே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் அரங்கில் நுழைந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுந்தனர்,” என்று தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

“பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியும் அவற்றில் ஒன்று. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அருகில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வருகை தந்தனர்.

“எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் கூடி அரங்கத்திற்கு வெளியில் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்தனர். அப்போது மழை பெய்ததால் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைந்தனர். அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடந்தது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்