மீட்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி

1 mins read
85ea7618-aa69-479d-85ac-51ea79e409ff
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்ட உறவினர்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தீபாவளி நாளன்று சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் (நவம்பர் 28) தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த அயராத மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. ஊழியர்கள் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களுடைய உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குவியும் பாராட்டு

மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனைத்துலக சுரங்க நிபுணர் ஆர்னல்ட் டிக்ஸ்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

ஊழியர்களை மீட்பதற்கு உதவ, அவர் நவம்பர் 20ஆம் தேதி அழைக்கப்பட்டார். அவர் சொன்னது போலவே, செவ்வாய்க்கிழமை 41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. அவருக்குப் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்