புதுடெல்லி: சீக்கியப் பிரிவினைவாதிகளை அமெரிக்காவிலும் கனடாவிலும் கொலை செய்ய, இந்தியா திட்டம் தீட்டி, சிலரின் உதவியை நாடியதாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், நிகில் குப்தா என்பவரை இதுகுறித்துத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த 52 வயது குப்தா, அமெரிக்காவில் போதைப்பொருள், ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
கடந்த மே 6ஆம் தேதி, அந்த அதிகாரி தனது பெயரைக் குறித்துவைத்துக்கொள்ளும்படி குப்தாவிற்குத் தகவல் அனுப்பியதாக அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
நியூயார்க்கில் ‘ஒருவரைக்’ கொலை செய்ய வேண்டும் என்று இந்திய அதிகாரி, குப்தாவிடம் தெரிவித்தார்.
‘அவரைக்’ கொலை செய்தால் அதற்கு கைம்மாறாக இந்தியாவில் குப்தா மீது பதிவான குற்றவியல் வழக்குகள் கைவிடப்படும் என்றார் அவர்.
‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற இயக்கத்தின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னூன் நியூயார்க்கில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். அவரைக் கொலை செய்வது தொடர்பாகத்தான் இந்திய அதிகாரி குப்தாவை நாடியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆறு வாரங்களாக இதன் தொடர்பில் இரு தரப்பும் தீட்டிய சதித் திட்டம் வெற்றிபெறவில்லை. இது குறித்த 15-பக்கக் குற்றச்சாட்டு மன்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரி, வேவு, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிப்பவர் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
மே 29ஆம் தேதி, காசுக்காகக் கொலை செய்யும் ஆட்களைத் தேடினார் குப்தா. ஆனால், தான் தொடர்புகொண்டவர் அமெரிக்க அமலாக்கப் பிரிவின் ரகசிய அதிகாரி என்று அவருக்குத் தெரியாது.
ஜூன் 3ஆம் தேதி, “நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம். அவரைக் கொலை செய்துவிடவும்,” என்று அதிகாரி குப்தாவிற்குத் தகவல் அனுப்பினார். எனவே, காசுக்காகக் கொலை செய்பவர் என்று தான் நம்பியவருக்கு 15,000 அமெரிக்க டாலர் முன்பணம் தர குப்தா ஏற்பாடு செய்தார்.
ஜூன் மாத இறுதியில், செக் குடியரசின் பிராக் நகருக்குச் சென்ற குப்தா அங்கு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஜூன் 18ஆம் தேதி, மற்றொரு சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜார், கனடாவின் வான்கூவர் நகரில் கொலை செய்யப்பட்டார்.
காசுக்காகக் கொலை செய்ய சம்மதித்தவரைத் தொலைபேசியில் அழைத்த குப்தா, நிஜாரைத் தங்கள் ஆள்தான் கொலை செய்ததாகக் குறிப்பிட்டார். நிஜார் கொலை செய்யப்பட்டதையடுத்து தங்கள் ‘இலக்கு’ கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்றும் குப்தா கூறினார்.
மூன்று மாதங்கள் கழித்து, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜாரின் கொலையில் இந்திய அரசாங்கத்திற்குத் தொடர்பு இருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். புதுடெல்லி அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தை வாஷிங்டன் தீவிரமாகக் கருதுவதாகவும் இந்தியா இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான உறவுகளைப் பாதிக்காது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம், உக்ரேனியப் படையெடுப்பு தொடர்பில் மாஸ்கோவைத் தனிமைப்படுத்துதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முன்னுரிமை தருவது அதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வேளையில், இந்தியா அதன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உயர்நிலை விசாரணை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா இந்தியாவின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.