பாட்னா: பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது கவுதம் குமார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவர் பள்ளியில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் அவரது வகுப்பறைக்குள் நுழைந்து. அந்த ஆசிரியரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஒரு செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவர் தன்னைக் கடத்தியது பின்னர் அவருக்குத் தெரியவந்தது. கவுதம் குமாரை கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் துப்பாக்கி முனையில், அவரை செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவர், தனது மகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தார்.
திருமண ஏற்பாடுகளை தயார்நிலையில் வைத்த பின்னரே கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண வீட்டுக்கு கவுதம்கொண்டு வரப்பட்டதும் தனது மகள் சாந்தினிக்குக் தாலி கட்டுமாறு கவுதம் குமாரை துப்பாக்கி முனையில் மிரட்டினார் ராஜேஷ் ராய். அவரும் பயத்தில் சாந்தினிக்கு தாலி கட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன ஆசிரியரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை காவல்துறை தொடங்குவதற்கு முன்னதாக, குமாரின் குடும்பத்தினர் அன்றைய இரவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமண முன்மொழிவை ஏற்க மறுத்த கவுதம் குமாரை ராஜேஷ் ராய் குடும்பத்தார் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர் உடல் ரீதியான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.