மும்பை: கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இறங்குமுகமாக இருந்த இந்திய பங்குச் சந்தைகள் நவம்பர் தொடக்கம் முதல் மீண்டு ஏறுமுகம் கண்டு டிசம்பரிலும் ஏறுமுகமாக உள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தல், அனைத்துலகப் பங்குச்சந்தைகளின் சாதக நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக 3 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை திங்கட்கிழமை காலை தொடங்கியதும் புதிய உச்சம் பெற்றுள்ளது.
அதன்படி, நிப்டி சுமார் 300 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 602 என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பேங் நிப்டி சுமார் ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 45 ஆயிரத்து 821 புள்ளிகளை தொட்டுள்ளது.
சென்செக்ஸ் 1 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 68 ஆயிரத்து 587 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பின் நிப்டி சுமார் 430 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 655 புள்ளிகளைத் தொட்டுள்ளது.