மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழப்பு

2 mins read
ef79a7c4-121c-4338-9e9f-fd9995adfb27
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட ஆயுதக் குழுவினரைத் தேடும் பணியை மாவட்டக் காவல்துறையும் பாதுகாப்புப் படையும் முடுக்கிவிட்டுள்ளன. - படம்: மணிப்பூர் காவல்துறை எக்ஸ் ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் மேத்தி மற்றும் குக்கி இனப் பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ஆம் தேதி இனக் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏழு மாதங்களுக்கு மேலாகியும் அங்கே அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் காவல்துறை அறிவித்துள்ளது.

இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (4.12.2023) தெங்னவுபால் மாவட்டத்தில் உள்ள சைபால் அருகே லெய்தாவோ என்னும் சிற்றூரில் ஆயுதம் ஏந்திய இரண்டு குழுவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

“சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் மக்கள்தொகையில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 53 விழுக்காட்டினர் . நாகா, குக்கி சமூகத்தினரை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 விழுக்காட்டினர். இவர்கள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

மைத்தேயி சமூக மக்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி பழங்குடியின மக்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது.

பின்னர் அது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. அதில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர். அந்த இனக்கலவரத்தில் கிட்டத்தட்ட 180 பேர் கொல்லப்பட்டனர்; 1,108 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்தக் கலவரத்தில் 4,786 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் 386 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரங்களால் கடந்த 215 நாள்களில் மட்டும் 60,000க்கு மேற்பட்டோர் தாங்கள் வசிக்கும் இடத்தைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மே மாதம் மூண்ட கலவரம் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்