கொலை வழக்கில் தொலைக்காட்சி நடிகர் கைது

1 mins read
eb464abd-ec85-4c5a-839a-2bf569e2a632
தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங். - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் புதன்கிழமை (டிசம்பர் 6) கைது செய்யப்பட்டனர்.

குவான்கேடா காத்ரி பகுதியைச் சேர்ந்த அவரது பண்ணை குர்தீப் சிங் என்பவரது வீட்டின் அருகில் இருந்துள்ளது. அந்தப் பண்ணைக்கும் வீட்டிற்கும் இடையில் இருந்த யூகலிப்டஸ் மரம் தொடர்பான பிரச்சினையில் இருதரப்பும் மோதியுள்ளனர்.

அப்போது பூபிந்தர் சிங் தனது துப்பாக்கியால் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் குர்தீப் சிங், அவரது மனைவி மீராபாய் மற்றும் அவர்களது மகன் பூடா சிங் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

குர்தீப் சிங்கின் மற்றொரு மகனான கோவிந்த் சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டிஐஜி முனிராஜ், பூபிந்தர் சிங் மற்றும் அவரது வீட்டு வேலையாட்களான கியான் சிங், குர்ஜார் சிங், ஜீவன் சிங் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை கியான் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், குர்ஜார் சிங் மற்றும் ஜீவன் சிங் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் புதன்கிழமை பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்