புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) சட்ட முன்வரைவு (மசோதா) 2023, : ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு சட்ட முன்வரைவுகளும் கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த இரண்டு சட்ட முன்வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து கடந்த இரண்டு நாள்களாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஜம்முவில் இருந்த 37 பேரவை இடங்கள் இப்போது 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் இருந்த 46 பேரவை இடங்கள் இப்போது 47 ஆக்கப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நம்முடையது என்பதால், நாங்கள் 24 பேரவை இடங்களை ஒதுக்கியுள்ளோம். ஆக மொத்தம் 114 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நம் நாட்டின் பகுதிதான். எப்படியும் 2026ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம்.
“ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இப்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றால், அதற்கு நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு செய்த இரண்டு தவறுகள்தான் காரணம். பாகிஸ்தானுடனான போரில் இந்திய ராணுவம் வெற்றி பெறவிருந்த காலகட்டத்தில் இந்தியா போர் நிறுத்தத்தை அறிவித்தது முதல் தவறு. ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்நாட்டுப் பிரச்சினையை எடுத்துச் சென்றது இரண்டாவது தவறு. இந்த இரண்டு தவறுகளுமே மாபெரும் வரலாற்றுத் தவறுகளாகும்.
பாரதிய ஜனதா கட்சி அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவம் எதுவும் நிகழவில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்ட, அவமதிக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பானதே இந்த சட்ட முன்வரைவு,” என்றார் அமைச்சர் அமித்ஷா.