‘பாஜகவுக்கு எதிராக அடுத்த 30 ஆண்டுகள் போராடுவேன்” - எம்.பி பதவி பறிப்புக்குப் பின் மஹுவா சூளுரை

2 mins read
9ee6fa09-4f72-40fe-a617-0bf4ba3f404b
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ”இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்,” என்று ஆவேசமாக சூளுரைத்துள்ளார் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா.

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருந்தனர். அப்போது மஹுவா கூறும்போது, ”நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணமோ, பொருள்களோ பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் மின்னஞ்சல் விவரங்களைப் பகிரக் கூடாது என்ற சட்டதிட்டங்களும் இல்லை.

இதற்கு முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அக்குழு பரிந்துரைத்து இருந்தது.

அதற்கான பரிந்துரை அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால், மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது, மஹுவா மொய்த்ரா எம்.பி. மீதான பரிந்துரை அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்ச்ன் சவுத்ரி பேசினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக விவாதிக்கலாம் என்றும் கூறினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து மக்களவை கூடி விவாதம் நடைபெற்றது.

அப்போது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மக்களவையில் மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.

குறிப்புச் சொற்கள்