ஐந்தாண்டு நிலவரம்: வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்

ஐந்தாண்டு நிலவரம்: வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்

1 mins read
6c6ca891-d635-4915-a800-106c9a835067
மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் 400க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்பு படித்து வருகின்றனர்.

அவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்தனர் என்ற புள்ளிவிவர அறிக்கையை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை இயற்கையான காரணங்கள் மற்றும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கனடாவில் 91 பேர் மரணம் அடைந்தனர். பிரிட்டனில் 48 பேர், ரஷ்யாவில் 40 பேர், அமெரிக்காவில் 36 பேர், ஆஸ்திரேலியாவில் 35 பேர், உக்ரேனில் 21 பேர், ஜெர்மனியில் 20 பேர், சைப்ரசில் 14 பேர், இத்தாலி மற்றும் பிலிப்பீன்சில் தலா 10 பேரும் மரணமடைந்தனர்.

இதுபற்றி மத்திய அமைச்சர் முரளிதரன் கூறுகையில், “வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று.

“மேலும் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி, தங்கும் வசதி போன்ற உதவிகள் தேவைப்பட்டால் அவர்கள் முதலில் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

“தூதரகம் வழியாக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்