தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலைபோல் குவிந்த ரூ. 290 கோடி பணம்; நான்கு நாளாக எண்ணப்பட்டது

2 mins read
ae15368d-082a-4f3d-997d-567e14f89ff2
பணத்தை எண்ண வருமான வரித் துறை அதிகாரிகள் 36 இயந்திரங்களை பயன்படுத்தினர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புவனேஸ்வர்: மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 290 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு அதனை எண்ணும் பணி இரவு பகலாக நடந்தது.

ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி என்னும் நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாமல் மதுபானங்களை விற்று வந்ததாகவும் இதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் வருமான வரித் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஒடிசா மாநிலத்தில் பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் கோல்கத்தா உட்பட அந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த நிறுவனம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமானது என்று நம்ப்படுகிறது.

சாஹுவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின்போது ஒடிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்தின் அலுவலகத்தில் ரூ.200 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த அலுவலகத்தின் அலமாரிகளிலும் கட்டில், மெத்தைகளுக்கு அடியிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டுக் கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை சோதனை தொடங்கியதில் இருந்து ரொக்கப் பணம் மலைபோல் குவிந்தது. அதனை எண்ணும் பணி நான்கு நாள் நீடித்தது.

பணத்தை எண்ணுவதற்கு 36 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் 157 பைகளில் பணம் நிரப்பப்பட்டு அந்தப் பைகள் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட பணம் ஒட்டுமொத்தமாக ரூ,290 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்றும் அவை அனைத்தும் கணக்கில் வராத பணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய அளவில் பணம் சிக்கியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

“நாட்டு மக்களே இந்தக் கட்டுக்கட்டான பணத்தைபாருங்கள். இந்தத் தலைவர்களின் உரையையும் கேளுங்கள். மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும். இது மோடியின் உத்தரவாதம்,” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்