புதுடெல்லி: ஆம்ஆத்மியின் செயல்திட்டங்களை மற்ற கட்சிகள் திருடி அவற்றை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றன என்று ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 67வது நினைவு தினம் டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
அந்த உரையில், “மற்ற கட்சிகள் ஆம்ஆத்மி கட்சியின் நல்ல திட்டங்கள் பலவற்றைத் திருடுகின்றன. அதாவது இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலவசக் கல்வி குறித்து எந்தவித வாக்குறுதியும் கொடுக்கவில்லை.
கல்விக்கான உத்தரவாதத்தை ஆம்ஆத்மி கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். ஏனெனில் கல்வித் துறையில் ஆம்ஆத்மி கட்சி நிறைய சாதனைகளைச் செய்துள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அம்பேத்கார் இன்னும் 10-15 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தியிருப்பார். இப்போது எந்தக் கட்சியும் கல்வியில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், ஆம்ஆத்மி நல்ல செயல் திட்டங்களுடன் கல்வித்துறையை மேம்படுத்தியிருக்கிறது. இன்னும் மேம்படுத்தி வருகிறது.
“கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. “ஐந்தாண்டுகளில் ஆம்ஆத்மி கட்சியால் நல்ல கல்வியைக் கொடுக்க முடியும் என்றால், 75 ஆண்டுகளில் ஏன் மக்கள் கல்வி கற்க முடியவில்லை,” என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்க தடைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அனைவருக்கும் சேவை செய்யப் பிறந்தவர்கள். நாட்டுக்காக போராடுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம், எங்கள் கொள்கைகளுடன் யாரிடமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்,” என்று அவர் கூறினார்.