வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது இந்தியா: ராஜ்நாத்

1 mins read
cb3094df-061d-4b57-8be5-01f59d85eb8c
ராஜ்நாத் சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: உலகில் தற்போது விரைவாக வளர்ந்து வரும் பெரும் பொருளியல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிற உலக நாடுகளின் வளர்ச்சியில் பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி உள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் 96ஆவது வருடாந்திர பொதுக்கூட்ட நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், உலக நாடுகளுக்கு ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை இந்தியா வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த 20ஆம் நூற்றாண்டில் உலகளவில் வளர்ச்சி இயந்திரத்திற்கான நாடாக அமெரிக்கா தனது பங்கை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபது ஆண்டுகளுக்கு சீனா அதே பணியை ஆற்றியது.

“தற்போது இந்தியா மிகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளதால் உலக அளவில் அடுத்த வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது. இந்தத் தருணத்தில் இவ்வாறு கூறுவது மிகப் பொருத்தமானது.

“21ஆம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்ற வர்த்தகத் தலைவர்கள் இந்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

இதே கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு நோக்கங்கள், வருங்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுயசார்பு மிக அவசியம் என்றார்.

குறிப்புச் சொற்கள்